மலேசியாவில் ரசிகர்கள் எழுப்பிய கோஷம்.. “இது வேற மேடை”.. சைகையில் அன்பு கோரிக்கை வைத்த விஜய்!

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களில் ஒரு பகுதியினர் "டிவிகே... டிவிகே" என விஜயியின் கட்சி பெயரை சொல்லி ஆர்ப்பரித்தனர். அப்போது விஜய், "இது அரசியல் மேடை அல்ல.. இங்க வேணாம்" என்பது போல கையால் சைகை செய்து தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்தார்.

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜனநாயகன் திரைப்படமே நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.


இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்றது. நேற்று மலேசியா விமான நிலையத்தில் விஜய்யை பாரம்பரிய நடனமாடி ரசிகர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடி விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இரவில் ஹோட்டலின் வாயிலில் காத்திருந்த ரசிகர்களை விஜய் சந்தித்தார்.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்ந்த பேனர், போஸ்டர், துண்டு, ஆடை, குடை, கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 80 ஆயிரம் ரசிகர்கள் சூழந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் சென்று தனது ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார் விஜய்.

விஜய்யை பார்த்ததும், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒருபகுதியினர் தவெக தவெக (TVK) என கத்த தொடங்கினர். அப்போது, விஜய், "இது அரசியல் மேடை அல்ல.. இங்க வேணாம்" என்பது போல கையால் சைகை செய்து தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்தார்.