கோவையே மாறப்போகுது.. கிரிக்கெட் மைதானத்துடன் வர்த்தக வளாகமும் வருது.. டெண்டர் கோரிய தமிழக அரசு!

 


கோவை: கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கான திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. பொது - தனியார் பங்களிப்பு முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், கிரிக்கெட் மைதானத்துடன் இணைத்து வர்த்தக வளாகத்தையும் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை தொகுதியில் புதிதாக பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதற்கேற்ப கோவையில் திமுக வெற்றி பெற்ற நிலையில், உடனடியாக கோவை கிரிக்கெட் மைதானப் பணிகளை தொடங்கியது. முதலில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தது.4 இடங்கள் தேர்வான நிலையில், ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையில் 20.7 ஏக்கர் நிலம் தேர்வானது. இதன்பின் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கான தடையிலான சான்று கோரி, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சான்று பிப்ரவரி மாதம் பெறப்பட்ட நிலையில், விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகளில் விளையாட்டு துறை முழுவீச்சில் ஈடுபட்டது.இந்த கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கான ஓய்வறை, உயர்தர இருக்கை வசதிகள், உள்புற பயிற்சி அரங்கம், விரிவுரை அரங்குகள், விஐபி-க்களுக்கான அறை, ஸ்பாக்கள், பொழுதுபோக்கு வசதிகள், பார்க்கிங் வசதிகள் என்று அனைத்தும் இடம்பெற யுள்ளது. அதேபோல் பொதுமக்களின் கருத்துக்களையும் தமிழக அரசு கோரியது.தற்போது கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் பணிகளை தமிழக அரசு அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அதாவது, சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. பொது - தனியார் பங்களிப்பு முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.